ரஜினியின் வீட்டுக்கே சென்று சட்டையை பிடித்து திட்டிய சரிதா…! கே பாலசந்தரின் சூப்பர் டெக்னிக்…!

ரஜினி வீட்டுக்கே சென்று அவருடைய சட்டையை பிடித்து ஏன் மனைவியை கொடுமைப்படுத்துகிறாய் என சரிதா கேள்வி கேட்கும் ஒரு காட்சியை கே பாலச்சந்தர் இயக்கிய ’அக்னி சாட்சி’ திரைப்படத்தில் வைத்திருப்பார். இது மாதிரி வித்தியாசமான காட்சிகளை வைக்கும் டெக்னிக்கை பாலச்சந்தரிடம் இருந்துதான் மற்ற இயக்குனர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் திரை உலகில் வித்தியாசமான அதே நேரத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை இயக்குவதில் பாலச்சந்தரை விட்டால் வேறு இயக்குனரே கிடையாது. அந்த வகையில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளியான ’அக்னி சாட்சிதிரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் கண்ணம்மா என்ற கேரக்டரில் சரிதா நடித்திருந்தார் என்பதும் அவரது நடிப்பிற்கு தேசிய விருது கொடுக்கலாம் என்றாலும் தமிழ்நாடு அரசின் சிறந்த விருது மட்டும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவக்குமார் ஜோடியாக இந்த படத்தில் சரிதா நடித்திருக்கும் நிலையில் அவர் சின்ன சின்ன அநியாயத்துக்கு எல்லாம் பொங்கி எழுவார்.இதை அவர் வீட்டில் உள்ளவர்கள் மற்றவர்களும் புரிந்து கொள்ளாமல் அவரை பைத்தியம் என்று கூறும் அளவுக்கு இந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும். அவர் எப்போது சாதாரணமாக இருப்பார்,

எப்போது அன்பாக இருப்பார், எப்போது கோபப்படுவார் என்று அவருக்கே தெரியாது என்ற வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். குழந்தை வடிவில் இருக்கும் மெழுகுவர்த்தி உருகி வருவதை பார்க்க சகிக்காமல் இந்த மாதிரி சாடிஸ்ட் இருக்குற வீட்டில் சாப்பிட மாட்டேன் என விருந்தை புறக்கணித்து வரும் கேரக்டர். மனைவியை விதவிதமாக கொடுமைப்படுத்தும் ஒரு ஆணாதிக்க கணவனை சினிமாவில் கூட சகித்துக் கொள்ள முடியாமல், அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரஜினியின் வீட்டுக்கே சென்று அவருடைய சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் கேரக்டர் தான் கண்ணம்மா.

இது மாதிரி பல காட்சிகளை பாலச்சந்தர் சரிதாவின் கேரக்டரை மெருகுற்றுவதற்காக வைத்திருப்பார். சரிதாவின் கணவர் கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார். ஒரு பக்கம் மனைவியை புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொண்டாலும் இன்னொரு பக்கம் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக அவரை விவாகரத்து செய்யவும் முடிவு எடுப்பார். ஆனால் அந்த நேரத்தில் சரிதா கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்தவுடன் மனம் மாறி மீண்டும் அவரிடம் அன்பு காட்டும் ஒரு அற்புதமான கேரக்டரில் சிவக்குமார் நடித்திருப்பார்.

இந்த படத்தில் கண்ணம்மா என்ற கேரக்டராகவே சரிதா வாழ்ந்து இருக்கின்றார் என்று படம் பார்த்த அனைவருமே அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். ஒரு நடிகையால் இப்படி கூட நடிக்க முடியுமா? அவருடைய உடம்புக்குள் நடிப்பு பூதம் ஏதாவது புகுந்து கொண்டதா என்றும் ஊடகங்கள் விமர்சனம் செய்தன.இந்த படத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையமைத்த ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட் என்பதும் அவற்றில் ’அடியே கண்ணம்மா’ என்ற சுசிலா பாடிய பாட்டு இன்றளவும் பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆணாதிக்க உலகின் கொடுமைகளை பல நூற்றாண்டுகளாக திரையில் காட்டி வந்தாலும்

அக்னி சாட்சி திரைப்படம் பெண்களின் மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை உள்ளே புகுந்து புரிந்து கொண்டு எடுத்த படம் போல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ’அக்னி சாட்சி’ திரைப்படம் பெண்கள் அவசியம் காண வேண்டிய படம், அதைவிட ஆண்கள் மிக முக்கியமாக காண வேண்டிய படம் என்று பாலச்சந்தர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த சமூகத்தில் ஆண்கள் எந்த அளவுக்கு நல்லவர்களாக வளர்க்கப்படுகிறார்களோ அந்த அளவுக்கு சமூகமும் நல்லவையாக மாறிவிடும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *