இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது சமீபத்திய பேட்டியில் தனக்கும் தன் மனைவிக்கும் காதல் ஏற்பட்ட தருணம் குறித்து பேசியுள்ளார். பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பாலாஜி கே குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த் சங்கர், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
செல்வா ஆர்கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் தொடர்பாக விஜய் ஆண்டனி ஊடகங்களுக்கு பேட்டியளித்துவருகிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தன் காதல் திருமணம் குறித்து விஜய் ஆண்டனி பேசியிருந்த வீடியோ வைரலாகிவருகிறது. அதில், ”சுக்ரன் படம் வந்தபொழுது உங்கள் பாடல்கள் நன்றாக இருக்கிறது என பாத்திமா போன் செய்து பாராட்டினார். அவருடன் ஒரு மணி நேரம் பேசினேன். அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அந்த நேரத்தில் சன் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தார்.
அவர் என்னை அழைத்து பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் அவர் என் வீட்டுக்கு வந்து அம்மாவுடன் எளிமையாக பழகினார். அது எனக்கு பிடித்திருந்தது. அவரை காதலிக்கலாம் என தோன்றியது. அடுத்த நாள் நான் அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். உங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறதா இருந்தா, அதுல என் பேர சேர்த்திடுங்கனு சொன்னேன். அதன் பிறகும் அவர் சிரித்து பேசிட்டிருந்தார். அப்போது தான் அவருக்கும் என்னை பிடித்திருப்பது தெரிந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.