சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையை கிளப்பிய ‘டாக்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருந்தனர் அர்ச்சனாவும் அவரது மகள் ஸாராவும். சின்னத்திரை தவிர்த்து, அர்ச்சனா தனியாக ஒரு யூடியூப் சேனலையும் நடத்திக் கொண்டு வருகிறார். அந்த யூடியூப் சேனலில் அர்ச்சனா, தன் மகள் சாராவுடன் இணைந்து பதிவிடும் வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாவது வழக்கம்.
அதில், குறிப்பாக பாத்ரூம் டூர். யூடியூப் சேனல் வழியாக அவர்களது வீட்டில் என்னென்ன உள்ளது என்பதை காட்சிப்படுத்தினர். அதில் வீட்டின் பாத்ரூமும் அடங்கும். அந்த வீடியோவில், நமது வீட்டில் உள்ள டாய்லெட்டில் ஒரு பெரிய ரூமே கட்டலாம் என்று கொஞ்சம் ஓவர் ஆகவே பேசியிருந்தனர். இந்த வீடியோ பலரை கடுப்படைய வைத்தது.
இதனையடுத்து நெட்டிசன்கள் இவர்களை வறுத்து எடுத்தனர். கடுமையாக விமர்சித்து ட்ரோல் செய்தனர். சற்றே சுதாரித்துக்கொண்டாலும் அர்ச்சனாவும், சாராவும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பதை நிறுத்தவில்லை. அவர்கள் எந்த ஒரு வீடியோ அல்லது போட்டோ போட்டாலும், நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்வதை நிறுத்தவில்லை.
அண்மையில் தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் அர்ச்சனாவும், சாராவும் கலந்துகொண்ட ஒரு வீடியோ, நெகட்டிவ் கமெண்ட்களால் மூழ்கடிக்கப்பட்டது. இதனால் கடுப்பான ஸாரா தன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வழியாக ஒரு போஸ்டை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ஹாய் எல்லோருக்கும் வணக்கம். இது எங்களை வெறுப்பவர்களுக்கான ஒரு சிறிய குறிப்பு. ஒரு டிவி நிகழ்ச்சி வீடியோவின் கமெண்ட்ஸ் வழியாக நாங்கள் எக்கச்சக்கமான வெறுப்புணர்ச்சிமிக்க வார்த்தைகளை பெற்றுள்ளோம், எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இவ்வளவு மோசமான வார்த்தைகளால் எங்களை திட்டியதில் பெண்களே அதிகம். எங்க குடும்பம் அன்பை மட்டுமே எடுத்துக்கொள்ளும். எங்களை பிடிக்கவில்லையா, உங்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதை உங்களுடனேயே வைத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் அது எங்களை கடுமையாக பாதிக்கிறது. வெறுப்பவர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை” என்று சாரா என்று பதிவிட்டுள்ளார்.