தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர். இதுவரை காமெடியனாகவே நடித்துவந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். தமிழர்களுக்கு புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது. லாரியில் கிளீனராகக்கூட வேலைசெய்து பலகட்ட போராட்டங்களுக்கு பின்புதான் திரைத்துறையில் நுழைந்தார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்த சமயத்தில் வீட்டில் இருந்த சூரி, தன் வீட்டு குழந்தைகளோடு சேர்ந்து கரோனா விழிப்புணர்வு வீடியோவையும் தொடர்ந்து வெளியிட்டார். தன் சொந்த ஊர் மக்களுக்கும் நிதி உதவி செய்திருந்தார் சூரி. அதன் தொடர்ச்சியாக சினிமா வாய்ப்பு இல்லாததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெப்சி திரைத் தொழிலாளர்களுக்கு 25 கிலோ அரிசி வீதம் 100 பேருக்கு வழங்கினார். இதேபோல் துணை நடிகர் சங்கத்துக்கு 25 கிலோ வீதம் 20 மூடை வழங்கியுள்ளார்.இந்த அளவுக்கு இன்று உதவியும், நேசமும் காட்டிவரும் சூரி மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு உயர்ந்தார்.
இப்போது சினிமாவைத்தாண்டி சில இடங்களில் உணவகமும் நடத்திவருகிறார் சூரி. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய சூரிக்கு அவரது நண்பர்களும், ரசிகர்களும் வாழ்த்து சொல்லியிருந்தனர். ஆனால் சூரியோ இந்த பெர்த்டேக்கு தன் சகோதரருக்கு வாழ்த்து சொல்லியிருந்தார். இதுகுறித்து அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில், ‘ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் இரட்டைப் பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன், உழைப்பிலும், திறமையிலும் உயர்ந்தவன். என்னைவிடவும் புகழ் பெற்றிருக்க வேண்டியவன்.
முந்திப் பிறந்ததால் தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி. அடுத்த ஜென்மத்தில் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி.’ என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே பரோட்டா சூரி இரட்டைப் பிறவியா என ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.