மணிரத்னம் இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரோஜா. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளுடன் வெற்றிப் பெற்றது. இதில் அரவிந்த் சாமி, மதுபாலா, வைஷ்ணவி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த வைஷ்ணவியை அரவிந்த் சாமி சந்தித்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.ரசிகைகளின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. “அரவிந்த் சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும்” என 90ஸ் கிட்ஸ் ரசிகைகளை உருக வைத்தவர் இவர். மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினியின் ‘கலெக்டர் தம்பி’ அர்ஜுன் கேரக்டரில் நடித்து பிரபலமானார்.
அதன்பின்னர் மணிரத்னம் படத்தில் அவரே ஹீரோவாக நடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. கவிதாலயா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் 1992ல் வெளியானது. இப்படத்தில் தான் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் தனது பயணத்தைத் தொடங்கினார். ரோஜா ரிலீஸாகும் முன்பே படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துவிட்டன. இதனால், ரோஜா திரைப்படம் தியேட்டரில் ரிலீஸான போது ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்தப் படம் பலவிதமான சர்ச்சைகளுக்கும் ஆளானது குறிப்பிடத்தக்கது.இதனிடையே ரோஜா படத்தில் ரிஷி குமார் என்ற கேரக்டரில் அரவிந்த் சாமியும், அவருக்கு ஜோடியான ரோஜா கேரக்டரில் மதுபாலாவும் நடித்திருந்தனர்.
கிராமத்தில் அக்காவை பெண் பார்க்கச் செல்லும் அரவிந்த் சாமி, மதுபாலாவை பிடித்திருக்கு என சொல்ல, அங்கிருந்து தொடங்கும் கதை காஷ்மீர் அழகியலில் சிலிர்க்க வைக்கும். முன்னதாக அரவிந்த் சாமி பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் வைஷ்ணவி நடித்திருப்பார்.அவரோ தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என சொல்ல, வைஷ்ணவின் தங்கையாக நடித்த மதுபாலாவை பிடித்திருப்பதாகக் கூறுவார் அரவிந்த் சாமி. ரோஜா படத்தில் மதுபாலாவின் அக்காவாக நடித்த வைஷ்ணவியின் கேரக்டர் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்தது. அதன்பின்னர் அரவிந்த் சாமியும் வைஷ்ணவியும் இணைந்து நடிக்காத நிலையில்,
தற்போது இந்த ஜோடி திடீரென சந்தித்துக் கொண்டது. அரவிந்த் சாமியிடம் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை என்றாலும் வைஷ்ணவி சுத்தமாக ஆளே மாறிவிட்டார். கறுப்பு நிற சுடிதார் அணிந்தபடி அரவிந்த் சாமி அருகில் நின்று போட்டோ எடுத்துள்ளார் வைஷ்ணவி. இந்த போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். 1992 ஆகஸ்ட் 15ம் தேதி ரோஜா திரைப்படம் வெளியானது. நாளை இந்தப் படம் வெளியாகி 32வது ஆண்டை நிறைவுசெய்யும் நேரத்தில், அதில் நடித்த அரவிந்த் சாமியும் வைஷ்ணவியும் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.