2 நாள் உள்ள போட்டா தாங்குவாரா…? பெரிய கட்சிகளையெல்லாம் சமாளிக்கணும்…! விஜய் குறித்து தயாரிப்பாளர் ராஜன் கருத்து…!

நடிகர் விஜய்யின் பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பளர் கே.ராஜன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ”விஜய்யிடம் வைக்கும் கோரிக்கை என்னானா அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோரையும் தொட்டு அரசியல் வாழ்க்கையை தொடங்கணும். அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டது. அவர் கண்டிப்பா வருவார். அரசியலுக்கு வருவதற்கான அச்சாரம்தான் இது. 16 வயதுடைய 10 ஆம் வகுப்பு மாணவர்கள், 18 வயதுடைய பிளஸ் டூ மாணவர்கள் ஆகியோரிடையே விஜய் பேசியிருக்கிறார். 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்னும் 2 வருடத்தில் ஓட்டுரிமை பெறுவார்கள். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இப்பொழுதே ஓட்டுரிமை பெற்றிருப்பார்கள்.

அது மட்டுமல்லாமல் 235 தொகுதிகளிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தொகுதிகளை தேர்ந்தெடுத்தே அரசியலுக்காக தான். இதுவரை விஜய் வேறு. அதிகம் பேசமாட்டார். சிரிப்பது கூட அளவாகத்தான் இருப்பார். ஆனா அது அரசியலுக்கு ஒத்துவராது. எம்.ஜி.ஆர்.போல சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். எம்ஜிஆர் போல மக்களிடம் தொடர்புகொள்ள வேண்டும். எம்ஜிஆர் மக்களுக்கு நல்லது செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

இல்லையென்றால் மக்கள் தீர்ப்பு மாறும். இப்போ இருக்கிற கட்சிகள் சாதாரண கட்சிகள் இல்லை. திமுக கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம். அதிமுகவும் அப்படித்தான். பாரதிய ஜனதா உள்ளே நுழைந்துவிட்டது. அந்த கட்சி சிறிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பாஜக, அதிமுகவின் வளர்ச்சியை குறைத்து தன் பலத்தை பெருக்க பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. திமுக எஃகு கோட்டை போல இருக்கிறது. அவரது தொண்டர்கள் எல்லாம் சாதாரணமான ஆட்கள் இல்லை. கடுமையாக வேலை செய்யக்கூடியவர்கள்.

விஜய் பண்பட வேண்டும். நாளைக்கு தூக்கி உள்ள போட்டாங்கனா, ரெண்டு நாள் இருப்பாரா? அதற்கு தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். மெர்சல் படத்துல ஒரு வசனம் பேசுனாருனு நெய்வேலியிலிருந்து அவரை காரில் தூக்கிட்டுவராங்க. மறுநாள் வீட்டில் ரெய்டு. அதில் விஜய் நிலைகுலைந்துபோய்விட்டார். அன்றிலிருந்து தற்போது வரை அவர் அரசியல் பேசவில்லை. தில் இருந்திருக்கணும், எதிர்த்து போராடியிருக்கணும். அரசியலுக்கு வந்துட்டா இந்த கட்சிகளை எல்லாம் சமாளிக்க வேண்டும். அவர் சமாளித்துவருவார் என நினைக்கிறேன்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *