கொலையெல்லாம் மின்பு அத்திபூத்தார் போன்ற நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் கொலை சர்வ சாதாரணமாக நடக்கத் துவங்கிவிட்டது. அதிலும் கர்ப்பிணி பெண் ஒருவரது கொலை வழக்கில், அவரது காதல் கணவரே கைது செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மாத சுஷ்மிதா என்ற கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையோரம் சடலமாகக் கிடந்தார். அவர் இறந்து 5 மணி நேரத்துக்கு பின்பே அதுபற்றி தெரிய வந்ததால் வயிற்றில் இருந்த சிசுவும் இறந்து போனது. அதேநேரம் சுஷ்மிதாவின் கழுத்தில் இருந்த நகைகள் மாயமானது. இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். ஆனால் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக கர்ப்பிணியின் கணவர் தினேஷ்குமாரை கைது செய்திருக்கிறது போலீஸ்.
தினேஷ்குமாரும், சுஸ்மிதாவும் காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்தவர்கள். மாமியார் வீட்டிலேயே மனைவியோடு வாழ்ந்து வந்த தினேஷ்குமாருக்கு, அவரது மாமனார் கனகராஜ் லோடு ஆட்டோ வாங்கிக்கொடுக்க அதை ஓட்டி வந்திருக்கிறார். துவக்கத்தில் மனைவியை நன்றாக கவனித்துவந்த தினேஷ்குமாருக்கு, ஏற்கனவே திருமணம் முடிந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது சுஷ்மிதாவுக்கு தெரியவர, தன் கள்ளக்காதலி கொடுத்த ஐடியாப்படி, மனைவி சுஸ்மிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
தனிமையில் மனைவியை அழைத்துபோய், அவரது கழுத்தை நாய் பெல்ட்டால் நெரித்து கொலை செய்தார். தொடர்ந்து கொள்ளைக்காக நடந்த கொலை என போலீஸை நம்பவைக்க அவரது கழுத்தில் இருந்த நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் மனைவியின் சடலத்தை கட்டிப்பிடித்தும் அழுதார் தினேஷ்குமார். போலீஸாரிடம் நகைக்காக என் பொண்டாட்டியை கொன்னுட்டாங்களே என அவர் அடிக்கடி புலம்ப போலீஸாரின் சந்தேக பார்வை தினேஷ்குமார் மீது படிந்தது. ஒருகட்டத்தில் அவரும் கொலையை ஒத்துக்கொண்டுள்ளார்.
எங்கே செல்கிறது சமுதாயம்?