இந்திய இசைத்துறையின் அடையாளமாக இருந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். 1929 ஆம் ஆண்டு பிறந்த அவர், சுமார் 80 ஆண்டுகள் இந்திய இசைத்துறையில் கோலோச்சினார். 36 பிராந்திய மொழிகளில் பாடியுள்ள அவர், தாதா சாஹிப் பால்கே விருது முதல் சினிமாத்துறையின் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பிரபலமாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவர் ஒருபோதும் பொதுவெளியில் பேசியதில்லை. ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்ற கேள்விக்கு லதா மங்கேஷ்கர் மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுத்தார். ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன.
இளம் வயதிலேயே தந்தை மற்றும் சகோதரர் தவறியதால், குடும்பத்தில் இருந்த ஏனைய சகோதரிகள் மற்றும் சகோதரனை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மூத்த சகோதரியான இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது தொழில் தீவிர கவனம் செலுத்திய லதா மங்கேஷ்கர், தங்கைகள் மற்றும் சகோதரனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்து அவர்களுடன் வாழத் தொடங்கினார்.
அவர்களுடைய மகிழ்ச்சியை மட்டுமே பிரதானமாக லதா மங்கேஷ்கர் நினைத்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை என கூறப்படுகிறது.
பத்திரிக்கா டாட் காம் தளத்தில் வெளியாகியுள்ள செய்தியின்படி, லதா மங்கேஷ்கர், முன்னாள் பிசிசிஐ தலைவர் ராஜ் சிங்கை விரும்பியுள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, அரச பரம்பரையைச் சேர்ந்த ராஜ் சிங் குடும்பத்தினர் லதா மங்கேஷ்கரை அவர் திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் பெற்றோரின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ராஜ் சிங் லதா மங்கேஷ்கரை திருமணம் செய்யவில்லை. அதேநேரத்தில் கடைசிவரை வேறு பெண்ணையும் திருமணம் செய்யமாட்டேன் எனக் கூறி, அப்படியே வாழ்ந்து காலமானார். இதேபோல், லதாமங்கேஷ்கரும் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கடைசி வரை லதா மங்கேஷ்கரும், ராஜ் சிங்கும் நல்ல நண்பர்களாகவே பயணித்தனர். லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்ளாததற்கு இவை தான் காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.111 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. லதா மங்கேஷ்கருக்கு மும்பையில் ஒரு ஆடம்பர மாளிகை உள்ளது. இது 10 குடும்பங்கள் தாராளமாக தங்கும் அளவுக்கு பெரியதாம். மேலும் இவர் முதன்முதலில் வாங்கியது செவ்ரலெட் கார் தான். பின்னர் மெர்சிடிஸ் பென்ஸ், க்ரைஸ்லெர் போன்ற ஆடம்பர கார்களை இவர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.