தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் வேலு பிரபாகரன். இவர் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாது இயக்குனராகவும் இருந்துள்ளார். “நாளைய மனிதன்”, “அதிசய மனிதன்”, “புதிய ஆட்சி”, “அசுரன்” போன்ற பல தனித்துவமான திரைப்படங்களை இயக்கியவர். அந்த காலகட்டத்திலேயே “நாளைய மனிதன்”, “அதிசய மனிதன்” என இரண்டு பாகங்களில் படம் எடுத்தவர்.
மேலும் தமிழ் சினிமாவில் 80களிலேயே சைன்ஸ் பிக்சனில் த்ரில்லர் திரைப்படங்களை இயக்கியவர். இவ்வாறு கோலிவுட்டின் வித்தியாசமான இயக்குனராக வலம் வந்தவர் வேலு பிரபாகரன்.வேலு பிரபாகரன் இளம் வயதில் இருந்தே உலக சினிமாக்களின் மீது ஈடுபாடு கொண்டவர். தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் அவர் சினிமாத்துறைக்குள் நுழைந்தார். ஆனால் அவரால் அந்த குறிக்கோளை அடையமுடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வேலு பிரபாகரன், தற்போதைய நடிகர்கள் குறித்து காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அதாவது, “உங்களுக்கு வெட்கமே இல்லையா?” என நடிகர்களை பார்த்து கேட்பது போல் கேட்கிறார். மேலும் பேசிய அவர், “இந்த நடிகர்கள் எல்லாம் பத்து ரூபாய்க்கு பெருமானம் பெறுவார்களா? 100 கோடி வேணும், 200 கோடி வேணும்ன்னு சம்பளம் கேட்குறாங்களே.
அமெரிக்காவில் கூட எவ்வளவு பெரிய நடிகனாக இருந்தாலும் பட்ஜெட்டிற்கு ஏற்றார் போல் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் ஏழைகள் அதிகமாக வாழும் இந்தியாவில் இவ்வளவு கோடி சம்பளம் வாங்குகிறார்கள். எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டையே வாங்கியிருக்கலாம். அவருக்கு ஒரு பொறுப்பு இருந்தது. ஆனால் இப்போதுள்ள நடிகர்களுக்கு பொறுப்பே இல்லை” என கூறியுள்ளார்.