அசோக் செல்வனும், நடிகை கீர்த்தி பாண்டியனும் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களது காதல் மலர்ந்ததன் பின்னணியை தற்போது பார்க்கலாம்.சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்னர் சூர்யா – ஜோதிகா, அஜித் – ஷாலினி, சினேகா – பிரசன்னா, கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த வரிசையில் புதிதாக இணைய உள்ள ஜோடி தான் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன். இவர்கள் இருவரது காதல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கு வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணம் செப்டம்பர் 13-ந் தேதி குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற உள்ளதாம்.
இதையடுத்து செப்டம்பர் 17-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாம்.நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ ஆவார். அவர் நடித்த ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதேபோல் கீர்த்தி பாண்டியனும், அன்பிற்கினியாள், தும்பா என ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் ஆவார். அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்
இடையே காதல் மலர்ந்தது எப்படி என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்வதற்கு முக்கிய காரணம் பா.இரஞ்சித் தானாம். அவர் தற்போது ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சாந்தனுவும் மற்றொரு ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கின் போது தான் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.